நாளை தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் அறிவித்த தெற்கு ரெயில்வே!

Advertisements

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாகக் காணப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் நாளைத் தைப்பூச திருவிழா நடைபெவுள்ள நிலையில் சிறப்பு ரெயில் இயக்கத் தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, மதுரை- பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் இரு நாட்களும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில் 2 நாட்களும் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்குப் புறப்பட்டுக் காலை 11.30 மணிக்குப் பழனி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் பழனியிலிருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *