வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும். சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப் பட வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.