
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா மோகனை, தென்கொரிய சுற்றுலாத்துறையின் புதிய கௌரவ தூதராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. இந்தியா மற்றும் தென்கொரியா இடையிலான கலாச்சார மற்றும் சுற்றுலா உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், அண்மையில் கொரிய பின்னணியில் வெளியான ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) என்ற நெட்பிளிக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட அரசு முறை விருந்திலும் பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிலையில், கொரிய கலாச்சாரத்தை இந்திய ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தென்கொரிய சுற்றுலா அமைப்பின் (KTO) தலைவர் பாக் சுங்-ஹியூக் முன்னிலையில் பிரியங்கா மோகன் கௌரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள பிரியங்கா மோகன், “இந்த மிகப்பெரிய கௌரவத்திற்கு தென்கொரிய அரசிற்கும், சுற்றுலா அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கொரியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மக்களின் அன்பு எப்போதும் என்னை ஈர்த்தவை. இந்திய ரசிகர்களுக்கும் கொரிய கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


