கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அரசு முறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர்,  மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்,-யை சந்தித்து  இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் லிமாசோல் நகரில் நடைபெறும் வர்த்தக மன்றத்திலும் சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து, கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார், கனடா பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு முக்கியமான சர்வதேச பிரச்சினைகள் குறித்து உரையாற்றுகிறார்.
குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு-ஆற்றல் தொடர்பு, குவாண்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் பேச திட்டமிட்டுள்ளார். பின்னர் கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 18-ந் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவிச் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், இது ஒரு முக்கியமான சந்திப்பாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *