
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மிக முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், “திருச்சி கிழக்கு உட்பட எந்தவொரு இடைத்தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். இந்த நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜயிடமே நான் மிகவும் தெளிவாக எடுத்துரைத்துவிட்டேன்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், புதிய அமைச்சரவையில் விசிக பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைச்சரவையில் நான் (விசிக) இடம் பெற வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எனக்கு அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இல்லை.
மக்கள் பணியும், கட்சியின் கொள்கை வலுப்படுத்துதலுமே தற்போதைய முதன்மை நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக கூட்டணிக்கு விசிக ஆதரவளித்த நிலையில், திருமாவளவனின் இந்த ‘அமைச்சர் பதவி மறுப்பு’ அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


