ஹாலிவுட் தனக்கானது இல்லை என்றும் அது தன்னை பயமுறுத்துகிறது என்றும் ‘ஸ்பைடர்மேன்’ ஆக நடித்து வரும் டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
மார்வெல் படங்களில் ‘ஸ்பைடர்மேன்’ ஆக நடித்து பிரபலமானவர் டாம் ஹாலண்ட். இதுவரை ‘ஸ்பைடர்மேன்’ மூன்று பாகங்கள், நெட்ஃப்ளிக்ஸின் ‘அன்சார்ட்டட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று உலகம் முழுவதும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்த பல்வேறு தகவல்களை டாம் ஹாலண்ட் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் சினிமா தயாரிப்பின் மிகப்பெரிய ரசிகன். ஆனால் எனக்கு ஹாலிவுட் பிடிக்கவில்லை. அது எனக்கானது அல்ல.
அதன் வியாபார உத்தி என்னை பயமுறுத்துகிறது. நானும் அந்த வியாபாரத்தின் ஒரு அங்கம்தான் என்பதை அறிவேன். அதனுடனான தொடர்புகளை ரசிக்கிறேன். ஆனால் அதை என்னிடமிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தவரை ஒரு சராசரி வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனக்கு முன்னால் வந்த எத்தனையோ பேர் தங்களின் சுயத்தை இழந்ததை பார்த்திருக்கிறேன்.
என்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாரும் இப்போது எனக்கு நண்பர்களாக இல்லை. காரணம் நான் என்னை இந்த வியாபாரத்தில் இழந்துவிட்டேன். என் குடும்பம் என் நண்பர்கள் என என்னை மகிழ்விக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த ஆர்வமாக இருக்கிறேன்.” இவ்வாறு டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார். டாம் ஹாலண்ட் முதன்முதலாக ’ஸ்பைடர்மேன்’ ஆக அறிமுகமானபோது அவருக்கு வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.