மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துவரும் திமுக, பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்காக கடந்த மாதம் காங்கிரஸ், தேசியவாத காங்., திரிணமுல் காங்., திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பீஹார் தலைநகர் பாட்னாவில் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தின.
எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை தாங்கும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 2வது கூட்டத்தை ஜூலை 13, 14ம் தேதிகளில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகள் காரணமாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பெங்களூருவில் கூட்ட திமுக எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், வேறு இடத்தில் கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே 13, 14ம் தேதி நடக்க இருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு திமுக.,வின் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.
ஆனால் மீண்டும் கூட்டம் ஜூலை 17, 18ம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கும் என காங்., அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு சோனியா சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெங்களூருவில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்க 17ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.