
சென்னை: கடந்த சில நாட்களாகவே அரசுப் பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்கப்படுவதாகவும், அரசு பேருந்தில் அமர்ந்திருந்த நடத்துனர் இருக்கையோடு வெளியே விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு பேருந்துகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்துச் சேவை இல்லாத நிலையில் அரசுப் பேருந்துச் சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களைச் சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாகக் கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துச் சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
அரசு பேருது சேவை: மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசுப் பேருந்துச் சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும், ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகப் புகார் எழுந்தது.
சாலையில் விழுந்த நடத்துநர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடத் திருச்சியிலிருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் வளைவில் திரும்பியபோது நடத்துனர் முருகேசன் பேருந்திலிருந்து இருக்கையுடன் வெளியே விழுந்தார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் பராமரிப்பு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். மேலும் அரசுப் பேருந்து முறையாகப் பராமரிக்கவில்லையெனப் பணிமனை மேனேஜர் உள்ளிட்ட மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமைச் செயலகம்: இந்த நிலையில் தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை முறையாகப் பயன்படுத்தும் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் பனீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட 8 கோட்டங்களின் கீழ் சுமார் 20,000 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடும் விமர்சனம்: இதில் சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாது சொகுசு பேருந்துகள், தாழ்ந்த சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் படுக்கை வசதி மற்றும் ஏசி வசதியுள்ள பேருந்துகள் உட்பட 19,000 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக போக்குவரத்து துறை முன்னெடுத்துள்ள நிலையில் பராமரிப்பின்மை காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது, நடத்துனர் இருக்கையுடன் கீழே விழுவது, படிக்கட்டுகள் கழண்டு விழுவது எனப் பல்வேறு விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு: இந்த நிலையில் தமிழகத்தில் தற்போதுள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகப் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பு பணியில் உள்ள பேருந்துகள், அவை என்ன நிலையில் இருக்கின்றன, அது தொடர்பாக நடவு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

