
அண்மையில் “இனிமேல்” என்ற இசை ஆல்பத்தை இயக்கி, அதில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது 40ஆவது வயதில் அடி எடுத்து வைக்கவிருக்கும் பிரபல நடிகை சுருதிஹாசன் தனது தந்தையின் “ஹே ராம்” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கினார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் அறிவு” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகியாகக் களமிறங்கினார்.
மிகச் சிறந்த நடிகையாகவும், பாடகியாகவும் கடந்த 24 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் அவர் பயணித்து வருகிறார். தற்பொழுது தமிழில் “சென்னை ஸ்டோரி” என்கின்ற திரைப்படத்திலும், தெலுங்கில் சலார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார்.


