Tiruppur: கொசு வலையை போர்த்திய படி வந்த நகர் மன்ற உறுப்பினர்!

Advertisements

திருமுருகன் பூண்டி நகர் மன்ற கூட்டத்தில் 16 வது வார்டு அ.தி.மு.க நகர் மன்ற உறுப்பினர் கொசு வலையை போர்த்திய படி தனது கோரிக்கையை ஆணையரிடம் தெரிவிக்க கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் நகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஆண்டவன் தலைமையிலும்,நகராட்சி தலைவர் குமார் தி.மு.க முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை கூட்டத்தில் விவாதம் செய்தனர்.

இந்நிலையில் அ.தி.மு.க 16வது வார்டு உறுப்பினர் தங்கவேலு, நகராட்சி ஆணையரிடம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அதிகமான கொசுக்கள் இருப்பதால் தனது பகுதி உள்ள அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்க கோரி மனுக்கள் கொடுத்து நீண்ட காலம் ஆகிய நிலையில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், நகராட்சி ஆணையரை கண்டிக்கும் விதமாகநூதன முறையில் தனது உடலில் கொசு வலையை போர்த்தி நகர் மன்ற கூட்டத்தில் தனது எதிர்ப்பினையும், சிறப்பு கவன ஈர்ப்பு வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் மன்ற கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையர் உடனடியாக தீர்வு காண்பதாக கூறிய நிலையில் மன்ற கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. மேலும் அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதி, கொசு மருந்து தெளிப்பது, சாலை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மன்ற கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *