
திருநெல்வேலியில் மாற்றுச் சாதிப் பெண்ணைக் காதலித்ததால் வெட்டிக் கொல்லப்பட்ட கவின்குமார் கொலையைக் கண்டித்துள்ள சீமான், கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின்குமார் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் நடந்தேறும் இத்தகைய படுகொலைகள் நாகரிகச் சமுதாயத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓர் ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராகச் சாதியை நிறுத்துவதும், அந்தச் சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் விலங்குத்தனத்தின் உச்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவின்குமார் கொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன சுர்ஜித்தின் பெற்றோர் ஆகியோரைச் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.




