
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கூட்டணிக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அவர், வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும் என்றார். மேலும், அவசரகதியில் செய்யப்படும் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர், வருகின்ற 2 ஆம் தேதி தியாகராய நகரில், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், திமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



