திருச்செந்தூரில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நாளை நவ.2 (சனி) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ள இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் விழாவாகக் கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா நடந்தாலும் புராண காலத்தில் திருச்செந்தூரில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்பதால் இங்கு வந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து விரதம் இருப்பது வழக்கம். ஆறு நாட்களும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறும்.

(பல்வேறு பகுதியில் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவதால் கோயிலுக்கு வெளியே விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காகத் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடி பரப்பளவில் தற்காலிக நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *