
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவையொட்டி இராட்டினங்களை இயக்கும் உரிமையைச் சங்கீதா அமூஸ்மென்ட் நிறுவனம் 50 இலட்ச ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. கோவிலுக்குப் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் மிகப்பெரிய இராட்டினங்களை நிறுவிக் கடந்த நான்கு நாட்களாக இயக்கி வந்துள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் தடையின்மைச் சான்று வாங்கவில்லை என்று கூறி இராட்டினங்களை நிறுத்த உத்தரவு இடப்பட்டது. முறையாக உள்ளூரில் அனுமதி பெற்று இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் தடையின்மைச் சான்று வாங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கூறவில்லை என்றும் இராட்டின உரிமையாளர் லெனின் தர்மராஜ் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தாங்கள் இராட்டினங்கள் இயக்கியபோது இதுபற்றி எதுவும் கேட்காத நிலையில் இப்போது திடீரென மாவட்ட நிர்வாகம் நிறுத்தி உள்ளதால் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கீதா அமூஸ்மெண்ட் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் சங்கீதா அமூஸ்மெண்ட் நிறுவனர் லெனின் தர்மராஜும், தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியனும் இது குறித்துச் செல்பேசியில் பேசிக் கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.அந்த ஆடியோவில் பேசும் லெனின் தர்மராஜ், கடந்தாண்டு கூட இராட்டினம் இயக்குவதற்கு மண்டபத்தில் பணம் கொடுத்ததாகவும், இருந்தபோதும் இப்போது இராட்டினத்தை இயக்க விடாமல் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறுகிறார். அதற்குப் பதிலளித்த மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் இராட்டினத்தைத் தாங்கள் நிறுத்தவில்லை என்று கூறுகிறார்
இதனைத் தொடர்ந்து பேசிய லெனின் தர்மராஜ், தாங்கள் கோவில் நிர்வாகத்திடம் கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்க உள்ளதாகவும், அதற்காகக் கோவில் முன்பு தங்களது சமுதாய மக்களை அழைத்துப் போராட உள்ளதாகவும், இதனால் நவீன் பாண்டியனுக்கு எதுவும் பிரச்சனை உள்ளதா என்றும் கேட்கிறார்.
இதையடுத்துப் பேசிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்குச் செல்பேசி எண் வாங்கித் தருவதாகக் கூறுகிறார்.இனிப் பேசி என்ன பயன்? விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்தாலும், அங்கு இராட்டினங்கள் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளாக இராட்டினங்கள் ஓட்டுவதற்கு உதவி செய்ததற்கு நன்றி என்றும், தன்னுடைய பணத்தைத் திரும்பப் பெற நீதிமன்றம் செல்லப் போவதாகவும் லெனின் தர்மராஜ் கூறும் ஆடியோ உள்ளது. லெனின் தர்மராஜும் நவீன் பாண்டியனும் பேசும் ஆடியோ முழுவதும் இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முறையாகச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கூற வேண்டிய அதிகாரி அதனைச் சொல்லாமல் மூன்று ஆண்டுகளாகத் தடையின்மைச் சான்று வாங்காமல் இராட்டினங்களை இயக்குவதற்கு உதவியது இந்த ஆடியோ மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
