
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்க்கிறது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியபோது, திருப்பரங்குன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றும் நடைமுறையை அனுமதித்தும் துரதிர்ஷ்டவசமாக, நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்தது. இது இந்து விரோத மனநிலையை பிரதிபலிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய பியூஷ் கோயல், பல நூற்றாண்டுகளாக முருகனுக்கு அங்கு விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது என்றும் திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்ற அனுமதிக்கும் ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்க்கிறது என்று விமர்சித்தார். இது தங்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என்றும் இந்தியாவை பிரிக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் மனநிலைக்கு எதிராகப் போராடுவதாகத் தெரிவித்தார்.



