திருமாவால் ஷாக்கில் முதல்வர் நடந்தது என்ன..?

Advertisements

தேர்தல் அறிக்கைகள் மற்றும் வேட்பாளர் பட்டியல்களை விட இப்போது அதிக பரபரப்பான பேச பொருளாக ஆகி இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வருகிற சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதுதான்.

“வழக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை செய்தி குறிப்பாக, பத்திரிகையாளர் சந்திப்பாக வெளியிடாமல் பேஸ்புக் நேரலை வீடியோ மூலமாக வெளியிட்டார்  திருமாவளவன்.  கிட்டத்தட்ட பத்து நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் முதல் ஆறு, ஏழு நிமிடங்கள் இந்த தேர்தலின் சூழ்நிலை, கட்சியின் சூழ்நிலை, விருப்பம் மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை இவற்றையெல்லாம் விளக்கி விட்டு வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்தார்.

வேட்பாளர் பட்டியலில் காட்டுமன்னார்கோயிலில் ஏற்கனவே போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற பொதுச் செயலாளர் சிந்தனை செல்வனை செய்யூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தார். அப்போதே காட்டுமன்னார்கோவிலுக்கு யார் வேட்பாளர் என்ற கேள்வி  சிறுத்தைகள் கட்சியினர் மத்தியிலும், ஊடகத்தினர் கட்சியினர் மத்தியில் எழுந்தது. சில நிமிட சஸ்பென்ஸ் வைத்து காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான நானே போட்டியிடுகிறேன் என்றும் அறிவித்தார்.

இதன் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை வெகுவாக மாற இருக்கிறது, அந்த அடிப்படையில் நான் மாநில அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்பது தான் திருமாவளவன் விடுத்திருக்கும் மெசேஜ். தற்போது,  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவனுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் முழுதாக எம்பி பதவிக்காலம் இருக்கிறது. இந்த நிலையில் அவர் திடீரென காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திருமாவளவனின் அறிவிப்பை கேட்டு விடுதலை சிறுத்தைகள் கொண்டாடிக் கொண்டிருக்க, திமுகவினர் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முதலமைச்சர் ஸ்டாலினே இந்த தகவலை கேட்டு ஷாக் ஆகியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் வட மாவட்ட அமைச்சர்களான எம் ஆர் கே பன்னீர்செல்வம், சிவசங்கர், சிவி கணேசன் ஆகியோர் அடுத்தடுத்து திருமாவளவனின் தொடர்புக்கு சென்று இருக்கிறார்கள்.

“என்ன அண்ணே திடீர்னு இப்படி ஒரு முடிவு?” என்பதுதான் அவர்கள் அனைவரும் திருமாவிடம் கேட்ட கேள்வி. முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த அறிவுறுத்தலின் பெயரில்தான் இந்த மூன்று அமைச்சர்களும் திருமாவுக்கு நேற்று இரவு ஃபோன் செய்திருக்கிறார்கள். அதாவது திருமாவளவனை சமாதானப்படுத்தி காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்துங்கள். என்பதுதான் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து இந்த அமைச்சர்களுக்கு வந்த மெசேஜ் போயுள்ளது.

அதன்படியே அமைச்சர்கள் திருமாவளவனிடம், ‘தலைவரே ரொம்ப குழம்பிட்டாரு. காட்டுமன்னார்கோவிலில் நீங்கள் போட்டியிட்டால் வெற்றி பெறுவது உறுதி. அப்படி இருக்கும்போது சிதம்பரம் எம்பி பதவியை ராஜினாமா செய்வீர்கள். அதற்கு பதிலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை தான் நிறுத்த வேண்டும் என்பீர்கள். திமுக தான் மீண்டும் செலவு செய்து வெற்றி பெற வைக்க வேண்டும். எதற்கு இந்த வேலை… ஏன் இந்த முடிவு?” என்று திமுக அமைச்சர்கள் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர்.

ஆனால் திருமாவளவனோ, எங்க கட்சிக்காரங்க நான் போட்டியிடறத விரும்புறாங்க. அவங்களுக்கு ஒரு உத்வேகம் அளிப்பதற்காக தான் நான் சட்டமன்றத் தேர்தலுக்கு வரேன். ஏற்கனவே நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் தானே. விடுதலை சிறுத்தைகள் கட்சியை வளர்க்க வேண்டியதுள்ளது. அதற்கு நான் எம்பி யாக இருப்பதைவிட எம்எல்ஏவாக இருப்பதே சிறந்ததாக நினைக்கிறேன்” என்றெல்லாம் அவர்களிடம் பதில் கூறியுள்ளார் திருமாவளவன்.

‘எங்கள் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே மிகுந்த வலியோடும் வேதனையோடும் இருப்பதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.  அது ஏதோ தொகுதிகளின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட  வலி மட்டுமல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி பார்க்கிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்… எங்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பார்க்கும் பார்வையும் அணுகுகிற விதமும் திருமாவளவனை மிகவும் காயப்படுத்தியுள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியலால் கிட்டத்தட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்கட்சி அதிருப்தி இருக்கிறது. விஜய் குறிப்பிட தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார். சட்டமன்றத் தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம்.இத்தகைய நிலையில் நாம் மாநில அரசியலில் இருப்பது தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து இருக்கிறார் திருமாவளவன். திருமாவின் அக்கா மகள் மாலதிக்கு கள்ளக்குறிச்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாலதி மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இந்த நிலையில் மாலதிக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் திருமாவளவன். இதன் மூலம் திருமாவின் குடும்பத்திலிருந்து இன்னொருவர் அரசியலுக்கு வந்துவிட்டார்.

மார்ச் 30ம் தேதி காலை நிலவரப்படி திருமாவளவனை சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு திமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் திருமாவளவன் இந்த அழுத்தத்திற்கு இடம் கொடுப்பாரா? அப்படி அவர் போட்டியில் இருந்து விலகினால் காட்டுமன்னார் கோவிலில் தனது அக்கா மகள் மாலதியை நிறுத்திவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு பதிய வேட்பாளரை தேர்வு செய்வாரா என்றெல்லாம் கேள்விகள் விடுதலை சிறுத்தைகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *