
திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு வரும் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை.. அதேநேரம் எழும்பூர் தொகுதியில் போட்டியிட திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பு கிடைத்துளளது.
ஆளுங்கட்சியான திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் பட்டியலில், பல பிரபலங்களின் பெயர்கள் விடுபட்டிருப்ப சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் முக்கியமானவர் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்ததார். ஏகப்பட்ட கனவுகளுடன் தான் அரசியலில் கால் பதித்திருக்கிறார் திவ்யா.
கோவை மாவட்டம் மாதம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சத்யராஜ், சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை இன்றைக்கும் தக்கவைத்திருப்பவர். அவரின் கலை வாரிசாக மகன் சிபி சத்யராஜும் சினிமாவில் பயணிக்கிறார். இப்போது, அரசியல் வாரிசாக மகள் திவ்யா திமுக-வில் பணியாற்றி வருகிறார். திவ்யாவை வானதி சீனிவாசனுக்கு எதிராக கோவையில் களமிறக்கப் போகிறது திமுக என்கிற பேச்சு ஏற்கனவே கிளம்பியிருந்தது.
இது குறித்து திவ்யா அளித்திருந்த பேட்டியில் , கொரோனா தொற்றுக்கு முன்பே அம்மாவின் பெயரில் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கி வந்தேன். சிறு வயது முதலே எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. 2024 மக்களவைத் தேர்தலின் போது ஏராளமானக் கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், அம்மாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக அரசியல் வருகையை அப்போது ஒத்திப் போட்டேன்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களும், திமுக-வின் கொள்கைகளும் பிடித்திருந்ததால் எனது சாய்ஸாக திமுக இருந்தது. அரசியலில் எனக்கு நிறைய கனவுகளும் ஆசைகளும் உண்டு. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட விருப்பமாக உள்ளேன். தமிழகம் முழுவதுமே மகிழ்மதி இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளோம். இனி திமுக உடன் இணைந்து அந்தப் பணிகளைத் தொடர்வோம்.
எங்களது பூர்விக ஊரான கோவையில் போட்டிட வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷமான விஷயம் தான். ஆனாலும், தலைமை என்ன சொல்கிறதோ அதைச் நான் செய்வேன். பொருளாதார ரீதியாக நான் என்றுமே யாரையும் சார்ந்து இருந்ததில்லை. அப்பாவின் பெயரையும் எங்கும் பயன்படுத்தியது கிடையாது. இது என் விளையாட்டு, நான் தான் விளையாடுவேன்” என்று கூறியிருந்தார். அவேளையில், தனது தாயார் மகேஸ்வரி பற்றியும் திவ்யா இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக ஒரு தகவல் கூறியிருந்தார்.
இதைப் பார்த்த பலரும் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது என்கிற ரீதியில் சமூகவலைத் தள பக்கங்களில் பேசிக் கொண்டனர். திவ்யா பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, “என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார். PEG டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் அவர் குணமடைவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும்.
அப்பா கடந்த 4 வருடங்களாக எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUB- ல் இருக்கிறோம்” என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கோமா ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்கள் வீட்டுக்குள் இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது குறித்து நடிகர் சத்யராஜ் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தாயாரின் உடல் நிலை காரணமாகவே திவ்யாவால் கோவையில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருப்பதாக தெரிகிறது. வரும் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து நிறுத்த வலுவான ஒரு வேட்பாளரை திமுக தேடியது. அதற்கு, திவ்யா சத்யராஜ் பொறுத்தமாக இருப்பார் என்றும் கருதியது. ஆனால், உடல்நலமில்லாத தாயாரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது இருப்பதால், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவது கடினம் என்று திவ்யா பதில் கூறியதாக தெரிகிறது.
இதனால்தான் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில், சென்னை மேயர் பதவி பெண்களுக்கு உரியது. அதனால், அடுத்த மேயர் தேர்தலில் சென்னை மேயராக திவ்யா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை உறுதி செய்யும் விதத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து பகிர்வதற்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது.
மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள், உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என திவ்யா தனது சமூகவலைத் தள பக்கத்தில் கூறியுள்ளார்.திவ்யாவின் இந்த பதிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



