திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
18-ந் தேதி சூரசம்ஹாரமும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. கந்த சஷ்டிவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் சேகர்பாபு நட்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.