“கனவு காணுங்கள்… அந்த கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல, உங்களைத் தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு!” இந்த ஒற்றை வாக்கியத்தின் மூலம் கோடிக்கணக்கான மாணவர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியவர்… இந்தியாவின் பெருமைமிகு முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்!
ராமேஸ்வரத்தில் ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார், அறிவியல் மற்றும் கல்வியின் நாயகனாக விளங்கும் அப்துல் கலாம். இவரின் முழு பெயர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம். ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா தம்பதியரின் ஐந்தாவது மகனான இவர், தனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காகக் காலையில் வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் விநியோகம் செய்துவிட்டுத்தான் தனது பள்ளிக்குச் செல்வார்.
இவரின் கடின உழைப்பால் படித்து, 1954-ம் ஆண்டு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி-யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டமும் பெற்றார். இளமையில் விமானியாக வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது, ஆனால் விமானப்படைத் தேர்வில் நூழிலையில் அந்த வாய்ப்பை இழந்தார். எனினும், அந்தத் தோல்வி அவரை முடக்கிப் போடவில்லை; மாறாக விண்வெளி அறிவியலில் உலகை வியக்க வைக்கும் உயரத்திற்கு அவரை அழைத்துச் சென்றது.
விண்வெளித் தந்தை விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில் இஸ்ரோவில் இணைந்த கலாம், இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவு வாகனமான SLV-3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இதன் மூலம் ரோகினி செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், அக்னி மற்றும் பிருத்திவ் போன்ற அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்தார். மேலும், 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையில் மிக முக்கியப் பங்காற்றி, இந்தியாவை வல்லரசு நாடுகளின் பட்டியலில் உயர்த்தினார். இதன் காரணமாகவே நாடு இவரை ‘மிசைல் மேன்’ என்று கொண்டாடியது.
அறிவியலில் ராணுவத் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், இதய நோயாளிகளுக்கான குறைந்த விலை ‘Kalam-Raju Stent’ கருவியையும், மலிவு விலை டேப்லெட் கணினியையும் உருவாக்கப் பங்காற்றி சாமானிய மக்களுக்கும் அறிவியல் பலன் கிடைக்கச் செய்தார்.
அறிவியல் துறையில் உச்சத்தைத் தொட்டபோதும், எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். கடந்த 2002-ம் ஆண்டு நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைச் சாமானிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் திறந்துவிட்ட அவர், இந்தியாவின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றவர். இதனால் மக்கள் அவரைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அன்போடு அழைத்தனர்.
அறிவியலாளராக மட்டுமல்லாமல், தமிழின் மீதும் திருக்குறளின் மீதும் தீவிர பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீணை வாசிப்பதிலும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ‘அக்னிச் சிறகுகள்’, ‘எனது பயணம்’, ‘இந்தியா 2020’ போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதித் தந்தார்.
தனது குடியரசு தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் ஓய்வெடுக்காமல், தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களுடனேயே நேரத்தைச் செலவிட்டார். இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மிகச்சரியாக, 2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று ஷில்லாங் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு நமது இதயங்களை விட்டுப் பிரிந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மாணவர்களிடம் அவர் செலுத்திய எல்லையற்ற அன்பைக் கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை ‘சர்வதேச மாணவர்கள் தினமாக’ ஐநா சபை பெருமைப்படுத்தியுள்ளது.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதரின் சிந்தனைகளும் லட்சியங்களும், என்றென்றும் நமது பாதையை வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும்!



