தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்களைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாகப் பொருளாதார உதவிகள் அல்லது சுயதொழில் வாய்ப்புகளை வழங்கலாமே தவிர, முறையான விதிகளுக்குப் புறம்பாக நேரடியாக அரசு வேலை வழங்குவது சட்டப்படி சரியல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது..
மேலும் , கட்சி பிரச்சார கூட்டங்களில் உயிரிழந்தோருக்கு அரசு வேலை வழங்குவது என்பது அதிகாரத்தின் துஸ்ப்பிரயோகம் என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில் , மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக அரசு வேலை ரத்து என்று தெரிவித்து இருப்பதின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்குத்து உள்ளதா..? என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் , கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனங்களுக்கும் ஆளானது. இந்தச் சோக நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் இந்த மாதத் தொடக்கத்தில் அதாவது ஜூலை 10 – ம் தேதி நேரில் கரூர் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ஒருவருக்கு வீதம் மொத்தம் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கும் ஆணையை அவர் நேரடியாக வழங்கினார். முதல்வர் நேரடியாக வழங்கிய இந்த அரசுப் பணி ஆணைகளுக்கு எதிராகச் சில பொதுநல மனுக்கள் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில், “அரசுப் பணி வழங்குவதற்கென்று குறிப்பிட்ட விதிமுறைகளும், கருணை அடிப்படையிலான வழிகாட்டுதல்களும் உள்ளன.
முறையான தேர்வோ அல்லது தகுதி அடிப்படையோ இல்லாமல், விபத்துகளில் பலியாவோர்க்கு நேரிடையாக அரசு வேலை வழங்குவது ஏற்கனவே வேலைக்காக காத்திருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது. வழக்கின் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் மட்டுமே இப்பணிகளை வழங்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இறுதி விசாரணைக்குப் பிறகு இன்று மதுரை கிளை அரசாணை ரத்து என்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அரசுப் பணி நியமன உத்தரவை முழுமையாக ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக நீதிமன்றம் பல விஷயங்களை முன்வைத்துள்ளது.ஒன்று , விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் துறை ரீதியான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் தெளிவான அரசாங்க விதிகளும் வழிகாட்டுதல்களும் இல்லை. இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிதியுதவி, இழப்பீட்டுத் தொகை அல்லது அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்களை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம்.
ஆனால், அரசுப் பதவிகளை வழங்குவது சரியான முன்மாதிரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில், இதனை அரசியல் கட்சிகள் பலரும் எதிர்த்து வந்த நிலையில் , அரசியல் கட்சிகள் சார்ந்து முன்வைக்கப்படும் விஷயங்கள் என்னவென்றால், பாதிக்கப்பட்ட எளிய குடும்பங்களின் துயரத்தைத் துடைக்க முதல்வர் எடுத்த இந்த உடனடி நடவடிக்கை, ஒருபுறம் மனிதாபிமான அடிப்படையிலான அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இதனை ‘சட்ட விதிகளை மீறிய அரசியல் வியூகம்’ என்று கடுமையாக விமர்சித்தன.
பொதுமக்களின் அனுதாபத்தைத் தன் பக்கம் ஈர்க்கவே அவசர அவசரமாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின..நீதித்துறையைப் பொறுத்தவரை, மனிதாபிமானம் வேறு; நிர்வாகச் சட்டங்கள் மற்றும் விதிகள் வேறு. விதிகளை மீறி அவசரகதியில் செய்யப்படும் எந்தமான அறிவிப்புகள் சட்டத்தின் முன் நிற்காது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, நிர்வாக ரீதியாக இது தவறான முன்னுதாரணம் என்பதே நீதித்துறையின் கருத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தினரிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குடும்பத் தூணாக இருந்தவர்களை இழந்துவிட்டுத் தவித்தவர்களுக்கு, முதல்வர் வழங்கிய அரசு வேலை மிகப்பெரிய நிம்மதியையும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அளித்திருந்தது.இந்நிலையில் , குடுப்பது போல் குடுத்துவிட்டு தற்பொழுது ரத்து என்று சொல்வது நியாயமா.? “நாங்கள் கஷ்டப்படும் நிலையில் இருக்கிறோம்.
எங்கள் துயரைப் போக்க அரசு தந்த கைத்தாங்கள் திடீரென நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டுவிட்டதே” என்ற விரக்தியில் அந்தக் குடும்பங்கள் உள்ளனர். பண உதவியோ அல்லது இழப்பீடோ எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அது காலப்போக்கில் கரைந்துவிடும்; ஆனால் ஒரு நிரந்தர அரசு வேலை தங்களின் வாழ்வாதாரத்தை என்றென்றும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பேரிடியாகவே அமைந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் முழுமையாக ஆராத நிலையில், அரசுப் பணி ரத்து விவகாரம் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. அரசு வேலைக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வருமானம் தரும் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களையாவது தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது…