
சென்னை:
திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 4 நாட்கள், வாக்காளர் பட்டியல் சேர்க்கை, பெயர் நீக்க மற்றும் திருத்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை, வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டன. அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாமென அறிவிக்கப்பட்டது.
வாக்காளர் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 69,000 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும், வட்டார தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார்.
மற்ற மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியட உள்ளனர்.
இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.



