உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? தவெக-வில் இணைந்ததால் வந்த சிக்கல்..

Advertisements

தமிழக சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு  ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர். இவர்களில் 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், “விதிமுறைகளை மீறிய உங்கள் மீது ஏன் தகுதி நீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது?” என்று கேள்வி எழுப்பி, அந்த 4 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தற்போது அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்..

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக அதிமுகவில் பல விதமான சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக கொறடா உத்தரவினை மீறி அதிமுகவை சார்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் புதிய தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக , அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களிக்க வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த உத்தரவினை மீறி சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கொறடா உத்தரவினை மீறிய அவர்கள் அனைவரையும் தகுதி நீக்க செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதே போல் இபிஎஸ்ஸுக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்தும் புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனிடையில் அதிமுகவில் அதிருப்தியில் இருந்தவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கேட்டனர். இதனையடுத்து தவெகவுக்கு ஆதரவு அளித்ததற்காக வேலுமணி அணியினர் முறைப்படி மன்னிப்பு கடிதமும் வழங்கினர். தொடர்ந்து இரண்டு தரப்பும் சபாநாயகரிடம் அளித்த புகார் மனுக்களை வாபஸ் வாங்கினார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் , மன்னிப்பு கடிதம் வழங்கிய அதிமுகவை சார்ந்த 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லையென அறிவித்தார். அதே நேரம் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.அதோடு அவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எப்போது இது துவங்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் தற்போது செய்தியாளர்களை சந்தித்ததை தொடர்ந்து நான்கு எம்எல்ஏக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸும் முறையாக அனுப்பப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக தான் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கட்சியில் இணைந்தனர். இப்போது நடவடிக்கை என்பது அவர்களை கைவிடுவதை போன்று இல்லையா என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், வெளியில் நடக்கும் அரசியல் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. சட்டமன்றத்தில் நான் எடுக்கும் முடிவுகள் என்பது, அவர்கள் எனக்கு அளித்துள்ள கடிதங்கள் அடிப்படையிலானது.

அதற்கும் நான் எடுக்கும் நடவடிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார் ஜே. சி. டி. பிரபாகர். முன்னதாக அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இதனையடுத்து உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, 4 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது தமிழக அரசியலில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *