ஏமாற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு என்று எடப்பாடி குற்றச்சாட்டு.!

134 கோடி ரூபாய்க்குச் சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மேட்டூர் அணையில் நீர் திறக்காததைக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளைச் சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, மேட்டூர் அணையில் நீரைத் திறக்காமல், 134 கோடி ரூபாய்க்குச் சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரத்தைத் தற்போது 18 மணி நேரமாகக் குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *