
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
இன்று ஒரே நாளில் அதிகாலை முதல் இரவுவரை ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணிவரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா எனக் கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணிவரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணிவரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகல் 2 மணி முதல் 3 மணிவரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
அசம்பாவித சம்பவங்களைத் தவிக்கத் தேவஸ்தானம் சார்பில் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி முதல் 5 மணிவரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணிவரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணிவரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளிகிறார்.
பக்தர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள்மூலம் பக்தர்களுக்குப் பால், காபி, உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
