டாஸ்மாக்கில் ஊழல் தலைவிரித்தாடுகிறது..கொதித்த அமலாக்கத்துறை..!

Advertisements

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அமலாக்கத்துறை நடத்திய இரண்டு சோதனைகள் மற்றும் அதில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, “இங்குக் கூட்டாட்சி என்பது என்ன ஆனது? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் படிக்கவில்லையா? உங்களுக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம்… மாநில அரசு குற்றத்தை விசாரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு நீங்கள் நேரடியாக விசாரிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியது.

விசாரணை தொடர்ந்த நிலையில், தலைமை நீதிபதி கூடுதலாக எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அவர், “கடந்த ஆறு வருடங்களில், அமலாக்கத்துறை தொடர்பான பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன்… இப்போது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.. நான் ஏதாவது சொன்னால் அது பெரிய செய்தியாக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக இன்றைய விசாரணையில், மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி தமிழக அரசு சார்பில் வாதிட்டனர். முறைகேடுகள் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் மீது எப்படி சோதனை நடத்தி கணினிகளைப் பறிமுதல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கறிஞர் கபில் சிபல் மேலும் கூறுகையில் இது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துக் கொண்டிருக்கும்போது அமலாக்கத்துறை ஏன் இடையில் நுழைகிறது?” என்று கேள்வி எழுப்பினார். அதேபோல வழக்கறிஞர் ரோஹத்கி, “டாஸ்மாக் ஊழியர்களின் பிரைவசிக்கு என்ன ஆனது… டாஸ்மாக் ஊழியர்களின் மொபைல்களை எப்படி கைப்பற்ற முடியும்? பெண் ஊழியர்கள் கூட தடுத்து வைக்கப்பட்டனர்” என்றார்.

இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “மாநில அரசு ஏற்கனவே 47 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றால் அதை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் . பெரிய அளவிலான முறைகேடுகள், பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இருப்பினும், நாங்கள் பண மோசடி குறித்து மட்டுமே விசாரிக்கிறோம்” என்றார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் கபில் சிபல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவை சுட்டிக்காட்டினார். இந்தச் சட்டத்தின்படி, ஒரு விவகாரத்தை ஒரு விசாரணை அமைப்பு விசாரித்து வரும்போது, வேறு ஒரு சட்டம் மீறப்பட்டதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்தால், அந்தத் தகவலைச் சம்பந்தப்பட்ட விசாரணை ஏஜென்சியுடன் பகிர வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை என்பதை சுட்டிக்காட்டி கபில் சிபல் தனது வாதத்தை முன் வைத்தார்.

அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு டாஸ்மாக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக மீண்டும் வாதிட்டார். மேலும், இதை வெறுமனே சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த இடத்தில் தான் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “”இங்கு கூட்டாட்சி என்பது என்ன ஆனது? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் படிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “நாங்கள் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம்… முதல் தகவல் அறிக்கையின் தன்மையைப் பாருங்கள், ஊழல் எந்த அளவுக்குத் தலைவிரித்தாடுகிறது என்பதையும் பாருங்கள்” என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் கபில் சிபல், “ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் அதை எங்களிடம் கொடுக்க வேண்டும் என வாதிட்டார்.

இப்படி இரு தரப்பிற்கும் இடையே நாள் முழுக்க காரசாரமாக விவாதம் நடைபெற்றது. டாஸ்மாக் விவகாரத்தை விசாரிக்க அமலாக்க துறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடையை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *