
தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் ஆற்றில் தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
போடிநாயக்கனூர் அருகே உப்புக் கோட்டையைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் நவீன்குமாரைக் கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று கூறி அவரின் உறவினர்கள் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி உறவினர்களும் ஊர்மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் நவீன்குமார் அவர் நண்பருடன் சென்றதாகத் தகவல் கிடைத்ததால் அவரைக் கைது செய்து விசாரித்தனர். 8 பேர் ஒன்றாக மது அருந்தச் சென்றதாகவும் அங்கு நவீன்குமாரை ஆற்றில் தள்ளிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உப்புக்கோட்டையில் உள்ள நவீன்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே தீயணைப்புத் துறையினர் உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்றில் தேடலில் இறங்கினர்.
தள்ளிவிட்டதாகக் கூறப்படும் இடத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றங் கரையில் ஒதுங்கிக் கிடந்த சடலத்தைக் கண்டெடுத்தனர். உடலைக் கூறாய்வுக்காகத் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நவீன் குமார் மூன்று பவுன் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததுடன், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்பேசி வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவற்றைப் பறிப்பதற்காகக் கொல்லப்பட்டாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.



