
தமிழ்நாட்டின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஏழாயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் ரயில்வே அமைச்சகத்துக்கு அறிவுறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஏழாயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், இது 2014ஆம் ஆண்டு ஒதுக்கியதைவிட எட்டரை மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நாலாயிரத்து 326 எக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில் இதுவரை ஆயிரத்து 52 எக்டேர் நிலங்களே கையகப்படுத்தி ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடிக்கு 144 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் 91 விழுக்காடும், திண்டிவனம் – திருவண்ணாமலை இடையான ரயில் பாதைக்கு 86 விழுக்காடும் நிலம் கையகப்படுத்தாமல் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.




