புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

Advertisements

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தக் கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாகக் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்தக் குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாகக் குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகச் சாலை அமைக்கப்பட்டது.

இங்குக் கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.

கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.

இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

பின்னர், யாகசாலையிலிருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.

தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றிக் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குக் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா… ஓம் சக்தி… பராசக்தி… என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள்மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *