எடப்பாடி தொகுதியில் குதிரைப் பேரமா? – சட்டப்பேரவையில் வெடித்த சர்ச்சை!

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரைப் பேரம் இல்லையா? என வருவாய்த் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, “பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரைப் பேரம் இல்லையா?” என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, “எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது” என ஆவேசமாகப் பதிலளித்தார்.

இதையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், “ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இல்லாமல் ராஜினாமா செய்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், 6 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்பது என்றும் வினவினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *