‘சர்தார் 2’ முதல் பாடல் ‘மயில்வீரா’ வெளியானது – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ‘சர்தார்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஏறுமயிலேறி’ பாடலைப் போலவே, ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலும் முருகப் பெருமானை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பக்தி மற்றும் ஃபோக் இசையுடன், நவீன ஹிப்-ஹாப் இசைக் கலவையையும் இணைத்து சாம் சி.எஸ். இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். முகேஷ், அஃப்ரோஸ் மற்றும் வஹீசன் ராசையா ஆகியோர் பாடியுள்ள ‘மயில்வீரா’ பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘சர்தார் 2’ திரைப்படம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-ன் திரைப்பயணத்தில் 100-வது படமாக அமைந்துள்ளது. இதனால் படத்தின் இசை மீது ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் பாடலே அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி வாரத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ‘மயில்வீரா’ பாடல் பெற்றுள்ள வரவேற்பை தொடர்ந்து, ‘சர்தார் 2’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *