
“திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சுமார் எட்டு லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியாகக் கடன் உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார் ” இன்றைய பட்ஜெட் கனவு பட்ஜெட் கானல் நீர், இது மக்களுக்குப் பயன் தராது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கான திட்டங்கள் எதுவுமே நிதிநிலை அறிக்கையில் இல்லை. பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவுமே நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
ஜெயலலிதா இருக்கின்றபோது ஏழை மக்களுக்குப் பசுமை வீடுகள் திட்டத்தைக் கொண்டு வந்தோம் அந்தத் திட்டத்தையும் இந்த விடியத் திமுக அரசு தற்போது நிறுத்தி விட்டார்கள்.
மூன்று ஆண்டு காலமாக மாநகராட்சி பகுதிகளில் இருக்கின்ற உட்புற சாலைகள் சீர் செய்யப்படவில்லை. கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளைச் சரி செய்வதற்கு வெறும் ஆயிரம் கோடியே ஒதுக்கியுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தடுப்பணைகள் கட்டப்படும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும் எனக் கூறினார்கள் இந்தப் பட்ஜெட்டில் அதுவும் இடம் பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில் தான் இன்று குறிப்பிட்டு துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 21 – 22 72, 839.29 கோடி நிதி பற்றாக்குறை. 22-23 இல் 1லட்சத்து 55 ஆயிரத்து 625.11 கோடி பற்றாக்குறை. 23-24 இல் இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 354 கோடி பட்ஜெட்டில் பற்றாக்குறை உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எட்டு லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி ரூபாய் கடன் உள்ளது. ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக 21 பொதுத் தேர்தலின்போது இன்றைய முதலமைச்சர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுது நாட்டில் கடனாளியாக ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார். இப்பொழுது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சுமார் எட்டு லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது.
கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும் என அமைச்சர்கள் இப்போது அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்க வேண்டும்.
எங்களுக்கு நிதிநிலை புத்தகம் கொடுக்கவில்லை கணினியில் தான் பார்த்தோம் எனவே முழுமையாக எதையும் பெற முடியவில்லை. நிதிநிலை வரவு செலவுத் திட்டத்தில் பல குளறுபடி உள்ளது. அதையெல்லாம் முழுமையாக எங்களது அறிக்கையில் ஊடகத்திற்கு பத்திரிக்கைக்குக் கொடுக்கப்படும்.
தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். இரண்டும் அவற்றுக்கு உழைத்தவர்களுக்கு பயன் தருவதில்லை. அதோடு கனவு பட்ஜெட் கானல் நீர் இது மக்களுக்குப் பயன் தராது. வருட வருடம் கடன் வாங்கி தான் திமுக அரசு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறது.
ஆட்சி வருவதற்கு முன்பு அதிமுகவில் கடன் வாங்கி வாங்கி தமிழகத்தை கடனாளியாக மாற்றிருப்பதாகக் கூறினார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடன் வாங்கி தான் ஆட்சி நடக்கிறது.இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் தமிழ்நாடு.
திமுக ஆட்சியை விடத் தற்பொழுது அதிக வருமானம் ஜிஎஸ்டியில் வருகிறது. பெட்ரோல் டீசல் விற்பனை, மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் வந்து கொண்டிருக்கிறது.எந்த ஒரு பெரிய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
இந்தப் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை பெரிய திட்டங்கள் எதுவுமே இடம்பெறவில்லை.திமுக ஆட்சியில் வருவாய் உயர்ந்திருக்கிறது திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. அதிமுக கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறுத்தி அதற்குச் செலவழித்த தொகை நிறுத்தி, திட்டங்களுக்குப் பெயரை மாற்றி அந்தத் தொகையை மாற்றிப் புதிய திட்டமாக அறிவித்து வருகிறார்கள்.
மத்தியில் யாரு ஆட்சிக்கு வந்தாலும் இருக்கின்ற நிதியை வைத்துச் சரியான ஆட்சியைக் கொடுத்தோம். மாநிலத்தில் இருக்கின்ற வருவாயைச் சரியான முறையில் படுத்தி நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்குச் செய்தோம். அதனால் தமிழகம் உயர்ந்தது அதைத் தான் திமுக இன்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக காலத்தில் தான் உயர் கல்வியில் ஒரு சாதனை படைத்தோம். அண்ணா திமுக அரசு எடுத்த நடவடிக்கை தான் கல்வி வளர்ச்சி பெற்றது.வார்த்தை ஜாலங்கள் போதாது எத்தனை தொழிற்சாலைகள் வருகிறது, எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு போடப்பட்ட ஒப்பந்தங்கள்மூலம் எத்தனை தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை.கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்த இளைஞர்களிடம் வாக்குகளைப் பெற்று இன்றுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லையெனக் கூறினார்.

