
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவை முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அரசு கேபிள் டிவி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை முறையாக வழங்கப்படாததால், கடந்த ஒரு வாரமாக சர்வர் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கேபிள் இணைப்புகளை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனத்தை, தவெக அரசு தனது மெத்தனப் போக்கால் சீரழித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
அரசு கேபிள் சேவை பாதிக்கப்படுவதன் மூலம், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும், அதை தடையின்றி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, நிலுவைத் தொகையை செலுத்தி அரசு கேபிள் சேவையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அரசு கேபிள் சேவையை நம்பியுள்ள 12 லட்சம் சந்தாதாரர்களின் உரிமைகளையும், சிறு கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு கேபிள் சேவை தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு தரப்பில் என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


