
இந்தோனேசியாவின் யோக்யகர்த்தாவில் உள்ள பரம்பனன் சிவன் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அந்தக் கோவிலைச் சீரமைக்கும் பணிகளையும் தொடக்கி வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்றாம் நாளான இன்று அவர் அந்நாட்டு அதிபர் பிரபவ சுபியாந்தோவுடன் ஹெலிகாப்டரில் யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் சிவன் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். இருவரும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து கோவில் அமைந்துள்ள இடத்தைக் கண்டுகளித்த காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது இந்தோனேசிய விமானப்படை விமானங்கள் இருபுறமும் பாதுகாப்புக் கொடுத்துப் பறந்து வந்தன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் யோக்யகர்த்தாவில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான பிரம்பனன் கோவில் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 எக்டேர் பரப்பளவில் 240 கோவில்களின் தொகுப்பான இது உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய இந்துக் கோவிலாகும். கம்போடியாவில் அங்கோர் வாட்டில் உள்ளது உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலாகும்.
இந்தக் கோவிலுக்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், அந்நாட்டு அதிபரையும் அங்குள்ள இந்திய வம்சாவளியினரும், இந்தோனேசிய மக்களும் தேசியக் கொடியசைத்து வரவேற்றனர்.
கோவில் வளாகம், அதன் வரைபடம், கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்களின் வடிவமைப்பு ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தோனேசிய அதிபர் பிரபவ சுயாந்தோவும் நடந்து சென்று கண்டுகளித்தனர்.
கோவில் வளாகத்தை இந்தியாவும் இந்தோனேசியாவும் கூட்டாக இணைந்து பராமரிக்கும் திட்டத்துக்கான கல்வெட்டை இருநாட்டுத் தலைவர்களும் திறந்து வைத்தனர்.
பரம்பனன் கோவில் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தோனேசிய அதிபர் பிரபவ சுபியாந்தோவும் அந்நாட்டு மக்களும் வழிபாடு மேற்கொண்டனர்.
கோவில் வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு அதற்காக நன்றி தெரிவித்தார். சிறார்கள் பலர் தாங்கள் வரைந்த படங்களைப் பிரதமர் மோடியிடம் காட்டி அதில் கையொப்பம் பெற்றனர்.
கோவில் வளாகத்துக்கு வெளியே இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பண்பாட்டு மணம் வீசும் இந்தக் கோவிலைக் கண்டுகளித்த போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் வீசும் பண்பாட்டு மணத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார். இந்தக் கோவிலின் பண்பாட்டு மணம் இரு நாடுகளையும் ஒன்றையொன்று இணைப்பதாகக் கூறிய அவர், இதைச் சிறப்பாகப் பேணிக்காக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிதான இந்தக் கோவிலில் சிவன், துர்க்கை, பிள்ளையார் ஆகியோரின் சிலைகள் உள்ளதாகத் தெரிவித்தார். இங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள் 2029ஆம் ஆண்டுக்கு முன் முடிக்கப்படும் என்று இந்தோனேசிய அதிபர் உறுதியளித்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, சீரமைக்கப்பட்ட பின் தானும் இங்கு வந்து அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதாக உறுதியளித்தார்.




