
வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் இருந்து ரவீந்தர ஜடேஜா விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இதற்கிடையே, அவரின் இன்ஸ்டாகிரம் அக்கவுண்டும் டி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவர் ரவீந்தர ஜடேஜா. 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சென்னை அணி 2018,2021 மற்றும் 2023ம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்ல ஜடேஜாவும் ஒரு காரணம். 2022ம் ஆண்டு தொடரில் சில ஆட்டங்களில் சென்னை அணியின் கேப்டனாகவும் ஜடேஜா பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், சென்னை அணியில் இருந்து ஜடேஜா மற்றும் இங்கிலாந்தின் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து விட்டு, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்க சென்னை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, இரு அணி நிர்வாகமும் பேசி முடிவெடுத்து விட்டதாகவும், வீரர்களின் ஒப்புதல் கடிதத்துடன் ஐ.பி.எல். கவுன்சிலுக்கு கடிதம் வழங்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை அணியில் இருந்து ரவீந்தர ஜடேஜா விடுவிக்கப்படுவது தொடர்பான செய்தி வெளியானதும், அவரின் இன்ஸ்டா அக்கவுண்டில் ஏராளமான ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஜடேஜாவின் ராயல்சவ்கன் என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுண்டும் டி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே , இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறுகையில்,’தோனி அணியின் நலனை கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பார். தோனி , ஜடேஜா இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. சென்னை அணியை சாம்பியன் ஆக்குவது மட்டும்தான் தோனியின் நோக்கமாக இருக்கும் ‘என்கிறார்.




