Advertisements

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அங்குப் பல ஆயிரம் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது.அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கலிபோர்னியா மாகாணத்திற்கும், அதன் மேயருக்கும் – அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான மோதலாக வெடித்துள்ளது.
கலவரத்திற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE), லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை குறிவைத்து பல அதிரடி சோதனைகளை நடத்தியது. இதற்கு பதிலடியாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கலிபோர்னியாவின் முக்கிய இடங்களில் கூடினர். அமைதியாக தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. ட்ரம்ப் வெளியிட்ட சமீபத்திய குடியேற்ற நெறிமுறைகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குடியேற கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சோதனைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பணியிட சோதனைகள் மற்றும் விரைவான நாடு கடத்தல் உத்தரவுகள் அடங்கும்.
இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக மெக்சிகோவை சேர்ந்த மக்கள்தான் இங்கே அதிகம் போராடி வருகிறார்.101 நெடுஞ்சாலையை மறிப்பது, வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது, வேமோ கார்கள் கூட எரிக்கப்பட்டன, கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.கலிபோர்னியா தலைவர்களான ஆளுநர் கேவின் நியூஸம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் ட்ரம்பின் தலையீட்டை கடுமையாக கண்டித்துள்ளனர். இது சர்வாதிகாரமானது மற்றும் சட்டவிரோதமானது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், ட்ரம்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். வன்முறையைத் தடுக்கவும், கூட்டாட்சி அரசை பாதுகாக்கவும் இது அவசியம் என்று டிரம்ப் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார்.
ஆனால் இது சட்டப்படி தவறானது. அதாவது கவர்னர் அனுமதி இல்லாமல் ட்ரம்ப் அனுப்பிய படைகளால் உள்நாட்டு கலவரம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு இதையடுத்து கலிபோர்னியா மாகாணம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு ட்ரம்ப்தான் காரணம் என்று புகார் வைத்துள்ளது. அவருக்கு எதிராக வழக்கும் தொடுத்துள்ளதால் இது கிட்டத்தட்ட உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை “சட்டவிரோதமான அதிகார துஷ்பிரயோகம்” என்று குற்றம்சாட்டினார்.
மாநிலத்தின் இறையாண்மையை மோசமாக்கும் வகையில் ட்ரம்ப் செயல்படுவதாக அவர் கூறினார். “அதிபர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, கலிபோர்னியா தேசிய பாதுகாப்புப் படைகளை சட்டவிரோதமாக அணிதிரட்டுவதை நாங்கள் ஏற்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார். நேற்று வரை சுமார் 1,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் களத்தில் உள்ளனர். அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட 2,000 வீரர்கள் இன்று பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிலைமை கைமீறி செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Advertisements



