
கடலோரத் தமிழகம் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாளை சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 15 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி, இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் 9 செண்டிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணை, நான்குநேரி ஆகிய இடங்களில் 7 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.




