தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் இருவரும் விடுதலை.!

கரூர்க் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 27ஆம் நாள் கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்த கரூர்க் காவல்துறையினர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களைப் பதினான்கு நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்துத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிக் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கரூர்த் துயரம் தொடர்பான வழக்கை ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகக் காவல்துறையின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.. இதையடுத்துத் திருச்சி மத்தியச் சிறையில் இருந்து இன்று இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *