Anbumani:பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்!

Advertisements

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திமுக அரசுக்கு மனம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசில் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பதுதான் எனது வினா. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி அமைக்கப் பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு அதன் அறிக்கையை 27.11.2018 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூட மதிக்காமல், கடந்த 2022-ம் ஆண்டு மே 7-ம் தேதி சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி,ஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அதன்பிறகு வந்த நிதியமைச்சரோ, தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்ட பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறி வருகிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.

வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *