
வெற்று விளம்பரங்களுக்குக் கோடி கோடியாக இரைத்துவிட்டு, வெளிமாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக வழங்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திமுக அரசின் தமிழ்ப்பற்றா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்கு நாற்பதாண்டுகளாகத் தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக வழங்கி வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணங்காட்டித் திமுக அரசு நிறுத்தியிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அயல் மாநிலங்களில் தமிழ் படிக்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்கள் தான் என்று கூறியுள்ளதுடன், இதுதான் தமிழ் வளர்ச்சியில் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? என்று வினவியுள்ளார்.
தமிழ் வளர்ச்சியில் உண்மையாகவே திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் வெளிமாநிலத் தமிழ்ச்சங்கங்களுக்குப் பாடநூல்களை வழக்கம்போல இலவசமாக வழங்க வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


