
சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகளைச் செய்யும் உரிமையைத் தனியாருக்குக் கொடுப்பது, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை என்று கூறியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே திமுக அரசின் சாதனை என்று தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பதே அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த திமுக, இப்போது அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார்.

