
திருவள்ளூர் மாவட்டத்தில் கடற்கரைச் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காடு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழவேற்காடு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியாகும். இந்த ஏரியின் கரைகளில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்கள் உள்ளன.
இங்குள்ள டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம், பழங்காலக் கோவில்கள், மசூதி ஆகியன சுற்றுலா இடங்களாக உள்ளன. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது. இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பைக் கொண்ட பழவேற்காட்டில் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுகிறது. பேருந்து நிலையம் என்று ஏதும் இல்லாததால் சாலையோரத்திலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. பயணிகளும் சாலையோரத்திலேயே காத்துநின்று பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.
இங்கிருந்து சென்னைக்கும் பிற இடங்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் பொன்னேரிக்குச் சென்று அங்கிருந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பழவேற்காட்டில் இருந்து சென்னைக்கு நேரடிப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் உட்படத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



