
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிக கனமழை கொட்டி தீர்த்தது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதிகமான மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து குளங்கள் போல் காட்சியளிக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பொருட்களை மக்கள் அகற்றி வருகிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்ததால் அங்கிருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. பஸ் போக்குவரத்தும் ஓரளவு சீரான நிலையில், அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்னமும் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் மிதக்கிறது. முத்துநகர் என்று போற்றப்படும் தூத்துக்குடி தற்போது வெள்ள நகரமாக மாறியுள்ளது. ஒரு தீவு போல் காணப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 18 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர ஏனைய கல்லூரிகள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




