
சென்னை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவின் , வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோன்று புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் நடத்துவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை, திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு குறைந்தது 8 வாரங்கள் அதாவது 2 மாதங்கள் கடந்த பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் சங்கம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கும் ஓடிடி வெளியீட்டுக்கும் இடையிலான கால இடைவெளி குறித்துத் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தொடர்ந்து விவாதித்து வரும் சூழலில், இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் வேலைநிறுத்த அறிவிப்பால், செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரவிருந்த பல முன்னணிப் படங்களின் வெளியீட்டுத் திட்டங்கள் பெரும் கேள்விக்குறியாகி உள்ளன. குறிப்பாக, துல்கர் சல்மானின் I’m Game, ஜி.வி. பிரகாஷ் குமாரின் Immortal, சூரியின் Mandaadi, அருள்நிதியின் Demonte Colony 3, கார்த்தியின் Sardar 2, மற்றும் நானியின் The Paradise உள்ளிட்ட பல எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் திரையரங்க வெளியீடுகளில் நேரடித் தடையோ அல்லது மாற்றங்களோ ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
திரைப்படத் துறையினரின் இந்த ஸ்டிரைக் முடிவால் செப்டம்பர் மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் முழுமையாக மாறுவதுடன், தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைக்குத் தமிழக அரசு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் என்ன மாதிரியான தீர்வு எட்டப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பலத்த வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




