ஜோதிடர் ரதன் பண்டிட் பதவி பறிப்பு.! அதிகாரிகளை மிரட்டியதாக புகார்.!

Advertisements

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிரடியான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது . திடீரென உச்சத்திற்குச் செல்வதும், அடுத்த கணமே சத்தமில்லாமல் சரிவதும் அரசியலில் புதியதல்ல என்றாலும், தற்போது தமிழக தலைமைச் செயலக வட்டாரத்தில் வெளியாகியுள்ள ஒரு பரபரப்பான தகவல் ஒட்டுமொத்த அரசியளையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தவெகவின் அதிகார மையத்தின் முக்கியப் புள்ளியாகவும், முதல்வரின் முக்கிய ஆலோசகராகவும் வலம் வந்த பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தற்போது தலைமைச் செயலகத்திற்குள் நுழையவே தடை விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை முற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படும் ராதன் பண்டிட், கடந்த தேர்தலுக்கு முன்பு விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தில் இணைந்தார். விஜய் பொதுவெளியில் அணியும் ஆடைகள் தொடங்கி, அவர் செய்யும் முக்கிய நிகழ்வுகள் வரை ராதன் பண்டிட்டின் கணிப்புகளின்படியே நடப்பதாகக் கூறப்பட்ட அந்தச் காலகட்டத்தில், அவர் சாதாரண ஜோதிடராக மட்டுமின்றி, நிர்வாக ரீதியாகவும் நேரடி முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்.

நிர்வாகப் பணிகளில் ஒரு ஆன்மிக மற்றும் ஜோதிட நபருக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்படுவது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துறை சார்ந்த வல்லுநர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஜோதிட ஆலோசனைகளுக்கு இடமளிப்பது சரியா என்ற கடுமையான கேள்விகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள் மற்றும் ஊடகங்களின் வெளிச்சத்தைத் தவிர்க்க நினைத்த விஜய் தரப்பு, உடனடியாக ஒரு வியூக மாற்றத்தைச் செய்தது. இதன்படி, முதல்வர் அலுவலகத்தின் நேரடிப் பொறுப்பிலிருந்து ராதன் பண்டிட் விடுவிக்கப்பட்டார். எனினும், அவரை முழுமையாக ஒதுக்காமல், இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது அரசு. ஆன்மிகம் மற்றும் கோவில் சார்ந்த பணிகளில் அவரது அனுபவம் கைகொடுக்கும் என்றும், அங்கு பெரிய அளவில் அரசியல் சர்ச்சைகள் எழாது என்றும் கணிக்கப்பட்டது. சில காலம் இந்த வியூகம் அமைதியாகவே நகர்ந்தது.

ஆனால், இந்த அமைதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அறநிலையத்துறைக்குள் நுழைந்த ராதன் பண்டிட்டின் செயல்பாடுகள் மீண்டும் புயலைக் கிளப்பின. துறை சார்ந்த தினசரி நிர்வாக விவகாரங்கள் மற்றும் முக்கியக் கோவில் விவகாரங்களில் அவர் தேவையின்றித் தலையிடத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, அரசு விதிகளையும் நடைமுறைகளையும் மீறி சில உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது, “எனக்கு முதலமைச்சரின் நேரடி ஆதரவு இருக்கிறது” என்று கூறி அதிகாரிகளை வற்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் தகவல்கள், தலைமைச் செயலக வட்டாரத்தையே உலுக்கியது. நிர்வாக நடைமுறையில் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்த முயன்றது கடுமையான விதிமீறலாகப் பார்க்கப்பட்டது.

இதனால் துறையின் மூத்த ஐஏஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடும் அதிருப்தியடைந்து, உயர் மட்டத்திற்கு முறையான புகார்களைத் தட்டிவிட்டனர். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த தவெக தலைமை, நொடிகூட தாமதிக்காமல் மிகத் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தது. இந்து சமய அறநிலையத்துறையில் அவர் வகித்து வந்த சிறப்பு அதிகாரி பதவி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, தலைமைச் செயலக வளாகம் மற்றும் முக்கிய அரசுத் துறை அலுவலகங்களுக்குள் அவர் இனி நுழையக் கூடாது என பாதுகாப்புப் பிரிவினருக்குத் திட்டவட்டமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அரசுக்கும் அவருக்கும் இருந்த அனைத்து தொடர்புகளும் அதிகாரப்பூர்வமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அரசியல் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழிகாட்டுபவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நம்பிக்கைகளையும் ஆன்மிகத்தையும் நிர்வாக அதிகாரத்தோடு கலந்து இயக்கும்போது, இதுபோன்ற சரிவுகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.

கோட்டையில் நீடிக்கும் நீண்ட காலச் செல்வாக்கை எதிர்பார்த்து களம் இறங்கிய ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நட்சத்திரங்கள், தற்போது அவருக்குத் துளியும் சாதகமாக இல்லை என்பதையே இந்த அதிரடித் தடை உணர்த்துகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *