
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதிவரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாகத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது.
உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முன்னதாகப் பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள 12 முகாம்களுக்குப் பரவியது.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.
முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.
முன்னதாகக் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
