தமிழ்நாடு நாளையொட்டி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள், ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், மருத்துவம், வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன், தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம், பாரம்பரியம் குறித்துப் பெருமிதம் கொள்வதாகவும், தமிழ்ப் பண்பாடு நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும், வருங்காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.


