
வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்கி இந்த ஆண்டு பிஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடத்தின் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் அவிமுக்தேஷ்வரானந்த் முதன்முறையாக துறவிகள் சார்பில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் அனைத்துதொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். வாரணாசி வந்த சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.“தாயான பசுவின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு கட்சி மற்றும் அரசியல்வாதிகளின் கருத்துக்களை நாங்கள் கேட்டுள்ளோம். தாயான பசு பாதுகாப்பிற்கு உண்மையிலேயே ஆதரவாக யார் நிற்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. எனவே, எங்கள் புதிய அரசியல் கட்சி சார்பில் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமல்ல, நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும், பசு தாயின் பெயரில் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம். இந்த தேர்தல் போட்டியின் மூலம் நாடு முழுவதும் பசுவைப் பாதுகாப்பது எங்கள் கொள்கை. இதன் மூலம், கோமாதா பசுவை காக்க விரும்பும் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
பொது மக்களின் ஆதரவுடன் நம் கோமாதாவை தேசத்தின் தாயாக மாற்றுவோம்.” எனவும் கேட்டுக்கொண்டார். யார் இந்த அவிமுக்தேஷ்வரானந்த் என்று பார்த்தால் இவர், உத்தரப்பிரதேசம் பிரதாப்கர் மாவட்டத்தின் பட்டி தாலுகாவில் உள்ள பிரம்மன்பூர் கிராமத்தில் பிறந்தார். வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி மற்றும் ஆச்சார்யா கல்வியில் பட்டம் பெற்றார்.அப்போதே அரசியலில் நுழைந்து, 1994 -ம் ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். துறவியான பின்பு பாஜக ஆளும், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் பிரபலமானார். இவர், கேதார்நாத்தில் இருந்து 228 கிலோ தங்கம் காணாமல் போனதாக புகார் கூறிய குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில், டெல்லியில் உத்தராகண்டின் கேதார்நாத் கோயிலை போல் மற்றொரு கோவில் கட்டப்படுவதை அவர் விமர்சித்தார். இதில், அசல் கோயில் இமயமலையில் உள்ளது என்று வாதிட்டார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பையும் இவர் நிராகரித்துள்ளார். பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி இந்து மதம் குறித்த பரப்புரையை நம்பி உள்ளது. இங்கு எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி, சமூக நீதி பிரச்சாரத்தை நம்பியுள்ளன. இந்தச் சூழலில் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தின் அரசியல் கட்சியும் தீவிர இந்துத்துவாவை முன்னிறுத்த உள்ளது. இதனால் சங்கராச்சாரியர்களில் ஒருவரான அவரது அரசியல் அறிவிப்பு பீகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தி தொகுப்பு : விஜயபாலன்



