
பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடந்தது.. அந்தக் கூட்டத்தில் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணி மாநிலத் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அதற்கு அந்த மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி, அதோடு கட்சிக்காரர்கள் என்னைப் பனையூர் அலுவலகத்தில் வந்து சந்திக்கலாமென மைக்கில் சொல்லிவிட்டு வெளியேறினார்.
அதன்பிறகு தோட்டத்தில் ராமதாசை சந்தித்த அன்புமணி, எங்களுக்கு எல்லாமே ஐயாதான். இது எங்கள் உட்கட்சி பிரச்னையெனக் கூறிவிட்டு சென்னையில் உள்ள பனையூருக்கு சென்றார்.ஆனால் இது அன்புமணி சொன்னதுபோல் உட்கட்சி பிரச்னை இல்லை. உள் குடும்பப் பிரச்னையெனக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கிசுகிசுத்தனர். இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பா.ம.கத்தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாகவும், செயல் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் அறிவிப்பு வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார் ராமதாஸ்.
அதன் பிறகு மே 10-ம் தேதி நடைபெற்ற பா.ம.க-வின் சித்திரை முழுநிலவு மாநாட்டில், `அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டணி போன்றவை இங்கு நடக்காது என்று அன்புமணியை மறைமுகமாகச் சாடினார் ராமதாஸ். அதையடுத்து மே 29-ம் தேதி ராமதாஸ், இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிப்பார் என்றார்.
அதையடுத்து, அன்புமணி யார் கருத்தையும் கேட்கமாட்டார். கூசாமல் பொய் பேசுவார். பா.ஜ.கக்கூட்டணிக்காக அன்புமணியும் சவுமியாவும் என் காலில் விழுந்தார்கள். பெற்ற தாயை நோக்கிப் பாட்டிலைத் தூக்கி வீசினார் அன்புமணி. அவருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தந்திருக்கக் கூடாது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

அதையடுத்த சில மணி நேரங்களிலேயே, சொந்த காரணங்களுக்காகத் தன்னுடைய மாநில இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பினார் முகுந்தன். அதன் தொடர்ச்சியாகப் பா.ம.கப்பொருளாளர் திலகபாமா மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மயிலம் சிவக்குமார் இருவரையும் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ்.
ராமதாசின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தா அன்புமணி. அதோடு இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்தது என் அம்மாதான். கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்கவோ, சேர்க்கவோ பொதுக்குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குதான் அதிகாரம் இருக்கிறது. அதனால் நானே தலைவர். அங்கிருந்து பதவி நீக்கக் கடிதம் வந்தால், அடுத்த நிமிடம் என்னிடமிருந்து நியமனக் கடிதம் வரும் என்று சோழிங்கநல்லூரில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி அதிரடி காட்டினார் அன்புமணி.
அதன் தொடர்ச்சியாக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கி நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்., மறுபுறம் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் கொடுத்து வருகிறார் அன்புமணி.
`இந்த நிலையில்தான் தனது தந்தையும், கட்சியின் நிறுவனறுமான ராமதாசை சந்திக்க, ஜூன் 5ம் தேதி காலை 9.15 மணிக்குத் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. அப்போது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், `அவர்கள் சந்தித்து கொள்ளவே இல்லையென மறுக்கிறார் தோட்டத்தில் இருந்த கட்சியின் சீனியர்கள் சிலர்.
இதுகுறித்து அவகள், “ஐயா பெரும்பாலும் காலையில் 10.30 மணிக்குதான் தன்னுடைய அறையை விட்டு வெளியே வருவார். அன்புமணி வருவது குறித்த எந்தத் தகவலும் அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அதனால் இன்று காலை வந்த அன்புமணியை சந்திக்க விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார் ஐயா. அதனால் தன்னுடைய அம்மாவைப் பார்த்து நலம் விசாரித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தன்னுடைய அக்காவிடம், தேர்தல் நேரத்தில் இவர் செய்வதெல்லாம் சரியா என்று ஆதங்கப்பட்டுவிட்டு, அங்கிருந்து 10.15 மணிக்குக் கிளம்பிச் சென்றார். தோட்டத்தை விட்டு வெளியேறி அன்புமணியின் கார் புதுச்சேரி பக்கம் திரும்பிய ஒரு சில விநாடிகளில், சென்னையிலிருந்து ஆடிட்டர் குருமூத்தியும், சைதை துரைசாமியும் வந்த கார் தோட்டத்திற்குள் நுழைந்தது.
அன்புமணி வெளியேறியபிறகு உள்ளே வாருங்கள் என்று ஐயாவிடமிருந்து சென்ற சிக்னல் காரணமாகவே, இந்த `உள்ளே வெளியே’ நிகழ்ந்தது என்றார். தோட்டத்திலிருந்து வெளியேறிய அன்புமணி, கார் கண்ணாடியைக் கூட இறக்கிவிடாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டுச் சென்றார்.
சுமார் 3 மணி நேர சந்திப்புக்குப் பிறகு வெளியேறிய ஆடிட்டர் குருமூர்த்தி, ராமதாஸ் என்னுடைய நீண்டகால நண்பர். என்னை அவருக்கும் மிகவும் பிடிக்கும். அன்புமணி வந்ததே எனக்குத் தெரியாது. பிரச்னை இருக்கும் இடத்துக்கு நான் செல்லவில்லை, நான் இருக்கும் இடத்தில் தான் பிரச்னை வருகிறது என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆக இப்போது உடைந்த கண்ணாடி துகளையெல்லாம் ஒன்று சேர்த்து உருகி மீண்டும் அதே போன்ற கண்ணாடியை உருவாக்க ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் களத்தில் இறங்கி உள்ளார்கள். அது முடியுமா இல்லை முடியாக என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் பா.ம.க. பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்லவேண்டிய நிற்கதி இருக்கிறது. அப்படி கூட்டணிக்குச் செல்லவில்லை என்றால் அன்புமணி கிறைக்கு செல்வது உறுதி. என்னதான் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மகன் சிறைக்கு செல்வதை எந்தத் தகப்பானாலும் ஏற்கொள்ள முடியாது. இறுதியில் மகனுக்காகத் தகப்பன் இறங்கிதான் வர வேண்டும். இதுதான் நம் பண்பாடு. இதை மீறி ராமதாஸ் நடந்துகொள்ள மாட்டார். அதனால் பா.ம.க பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்வது உறுதி.
– செய்திதொகுப்பு : குட்டிக்கண்ணன்



