
2020ஆம் ஆண்டு தில்லி வன்முறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், சர்ஜில் இமாம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் ஐவருக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டில் வடகிழக்குத் தில்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய மாமன்ற உறுப்பினரின் வீட்டு மாடியில் இருந்து காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதல் அதையடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயமடைந்தனர்.
முன்கூட்டியே திட்டமிட்டுக் கற்களைக் குவித்து வைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பலர் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐந்தரை ஆண்டுகளாகச் சிறையில் உள்ள நிலையில், கீழ் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் குல்பிசா பாத்திமா, மீரான் ஐதர், சிபா உர் ரகுமான், சதாப் அகமது, முகமது சலீம் கான் ஆகிய ஐவருக்கும் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.
அதேநேரத்தில் உமர் காலித், சர்ஜில் இமாம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்க மறுத்துவிட்டது. இவர்கள் இருவரும் இந்தக் குற்றங்களின் மூளையாகச் செயல்பட்டதற்குத் தக்க சான்றுகள் உள்ளதாகக் கூறிப் பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.




