முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்.. துரைமுருகன் கொடுத்த பதில்..!

Advertisements

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றியது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் துரைமுருகன், “காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின். அந்தப் பெயரை மாற்றுவதில் ஒரு முதலமைச்சர் ஈடுபடுவது முறையல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாணவர்களை பள்ளியை நோக்கி வரவழைக்கவும், மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வியை கற்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மத்திய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்திவந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதன்பிறகு, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தினார்.

‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது, ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ எனும் பெயரை மாற்றி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த துரைமுருகன், “காமராஜர் கொண்டு வந்தது மத்திய உணவு திட்டம். எனவே அதற்கு பெயரிட்டாலும் பரவாயில்லை. அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர். எனவே அதற்கு அவரது பெயர் வைத்தாலும் பரவாயில்லை. ஆனால், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின். அந்தப் பெயரை மாற்றுவதில் ஒரு முதலமைச்சர் ஈடுபடுவது முறையல்ல.

இப்படிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தெரியாவிட்டாலும் பக்கத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் நல்லதே தவிர பெயர் மாற்றிக் கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல.அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அம்மா உணவகம். நாங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி இருக்க முடியும்.

ஆனாலும் தேவையில்லை ஒரு முதலமைச்சர் ஆரம்பித்திருக்கிறார் அப்படியே இருக்கட்டும் என்று நாங்கள் பெருந்தன்மையாக இருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது நீண்ட நெடுங்காலம் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி. அதனால் சில நீக்கு போக்குகள் தெரியும். ஆனால் தற்போது உள்ள கட்சி ஒரு ரெடிமேட் அதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *